இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான பிரவீன் ஜயவிக்ரம மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ICC நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றின் வாயிலாகவே பிரவீன் ஜயவிக்ரம மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றது. பிரவீன் ஜயவிக்ரம தொடர்பிலான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் தெளிவாக விபரிக்கப்படாத போதிலும் அவை சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற LPL தொடரின் போட்டிகள் என்பவற்றுடன் தொடர்புபட்டவை என சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் பிரவீன் ஜயவிக்ரம தொடர்பில் மேலும் தெரிய வரும் விடயங்களின் அடிப்படையில் அவர் ICC இன் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மூன்று பிரிவுகளில் மீறியிருப்பதாக கூறப்படுவதோடு அதில் அவர் ஆட்டநிர்ணய முயற்சி ஒன்று நடைபெறுவது தொடர்பில் ICC இடம் அறிவிக்காமல் போனது முக்கிய விடயமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் பிரவீன் ஜயவிக்ரம LPL போட்டிகளின் போது சக வீரர் ஒருவரிடம் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்ட ஒருவரை தொடர்புபடுத்துமாறு கேட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பிலும் ICC இடம் அறிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.