பலரும் தாங்கள் விரும்பிய விலங்குகளைச் செல்லப்பிராணிகளாக வீடுகளில் வளர்க்கின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் தங்களது செல்லப்பிராணிகள் செய்யும் குறும்புகளை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்தும் வருகின்றனர்.
இவ்வாறு பகிரப்பட்ட காணொளிகள் மூலமாகப் பிரபலமடைந்த செல்லப்பிராணிதான் நளா என்ற பூனைக் குட்டி.
இந்தப் பூனைக் குட்டி தற்போது உலகளவில் மிகவும் பிரபலமாகியுள்ள அதேவேளை Instagram இல் பதிவிடப்படும் அதனுடைய குறும்புத்தனமான ஒரு Reels க்கு இந்திய மதிப்பில் சுமார் 12 இலட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பூனைக்குட்டி இதுவரை மொத்தமாக சுமார் 895 கோடி இந்திய ரூபாவை சம்பாதித்து உலகின் பணக்காரப் பூனைக்குட்டி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் இருந்து குறித்த பூனைக்குட்டியை வாங்கியிருந்த இதன் உரிமையாளர் அதன் குறும்புத்தனத்தைக் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சந்தர்ப்பத்தில் அதற்கு பெரும் வரவேற்புக் கிடைத்ததுடன் அவை குறுகிய காலப்பகுதிக்குள் வைரலாகியிருந்தன.
தற்போது இந்தப்பூனைக்குட்டியை 4.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் Instagram இல் பின்தொடர்கின்றனர்.
மேலும் Instagram இல் அதிகம் பின் தொடரும் பூனைக்கான கின்னஸ் உலக சாதனையையும் இந்தப்பூனைக்குட்டி படைத்துள்ளது. அத்துடன் 4 மனித போட்டியாளர்களை விஞ்சி, 2019 ஆம் ஆண்டின் TikToker of the Year என்ற விருதும் இதற்குக் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தப்பூனைக்குட்டியின் நாளாந்த செயற்பாடுகளைக் காணொளியாக பதிவுசெய்து அதனைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதே தனது முழுநேர வேலையாக மாறியுள்ளதாகவும், இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியினை விலங்குகள் காப்பகத்திற்குக் கொடுப்பதாகவும் பூனைக்குட்டியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.