அடுத்த 16 ஆண்டுகளில் உலகில் கல்வியறிவு இல்லாதவர்களே கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மீடியா மொங்க்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உலக எழுத்தறிவு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் இந்தச் சாதனத்தை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டெமோ வீடியோவில் Pen , Pencil உள்ளிட்டவை மீது பொருத்தும் வகையில், ஒரு டிஜிட்டல் திரையைக் கொண்ட கருவி அமைக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள மைக்ரோ போன், நாம் சொல்லும் வார்த்தையை உள்வாங்கிக் கொள்கிறது. பின்னர் வார்த்தைகளை எழுத்துக்களாக AI தொழில்நுட்பம் மாற்றி டிஜிட்டல் திரையில் காட்டுகிறது. அந்த வார்த்தைகளை எழுத்தறிவு இல்லாதவர்கள் அப்படியே பார்த்து எழுத முடியும்.
இதில் உள்ள திரை, ஆங்கில எழுத்துக்களை மட்டுமே காட்டும் நிலையில், மற்ற மொழிகளுக்கும் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
AI எழுது கருவி, கல்வியறிவு இல்லாதவர்கள் எழுதிப் படிக்கவும், மீண்டும் மீண்டும் எழுதி கற்றுக்கொள்ளவும் பெரிதும் உதவும் என்றும் உலக எழுத்தறிவு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.