இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. அதற்கு முன்னர் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் இலங்கை அணி விளையாடியது.
கடந்த 14ஆம் திகதி ஆரம்பித்து நான்காம் நாள் ஆட்டம் பகல் போசனத்துக்கு முன்னதாக நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 136 ஓட்டங்களுக்கு சுருண்டதாலேயே தோல்வியைத் தழுவியது.
இலங்கை முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக நிஷான் மதுஷ்க 77, தனஞ்சய டி சில்வா 66, ஏஞ்சலோ மெத்யூஸ் 51, திமுத் கருணாரத்ன 43, சதீர சமரவீர 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
எவ்வாறாயினும் இரண்டாவது இன்னிங்ஸில் நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரட்ன, மத்யூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் திறமையாக துடுப்பெடுத்தாடி, டெஸ்ட் தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தனர்.
இந்நிலையில் 122 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி மென்ச்செஸ்டரில் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.