நிறைவடைந்த இலங்கை , இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால் ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் அசத்திய போதிலும் 205 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கமிந்து மெண்டிஸ் 3ஆவது சதத்தைக் குவித்து அசத்தினார். 183 பந்துகளை எதிர்கொண்ட அவர் 113 ஓட்டங்களைக் குவித்தார்.
119 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் சந்திமால் 79 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 27ஆவது டெஸ்ட் அரைச் சதமாகும்.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஜோ ரூட், ஜெமி ஸ்மித் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு வெற்றியை உறுதிப்படுத்தினர். ஜெமி ஸ்மித் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் பொறுமையாக துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 128 பந்துகளை எதிர்கொண்டு 62 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் ப்ரபாத் ஜயசூரிய 98 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக இங்கிலாந்து அணியின் ஜெமி ஸ்மித் தெரிவானார்.