உலகளவில் பிரபலமான இன்ஸ்டகிராமில் ஒருவரது ஆளுமையை அலசி ஆராயும் சுவாரஸ்யமான புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.
ரோஸ்டகிராம் எனும் சேவை இன்ஸ்டகிராம் தளத்தில் ஒருவரது ஆளுமையை கண்டறிந்து சொல்கிறது. இதற்கு பயனர்கள் தங்களது இன்ஸ்டகிராம் முகவரியை ரோஸ்டகிராமில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், உங்களது இன்ஸ்டகிராம் கணக்கு Lock செய்யப்பட்டதாக அல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.
முகவரியைச் சமர்ப்பித்த பின்னர் ஓர் இன்ஸ்டகிராம் கணக்கின் பதிவுகள், ‘பயோ’ போன்றவற்றை ஆராய்ந்து இந்த இன்ஸ்டகிராம் கணக்கை வைத்திருப்பவர் எத்தகைய ஆளுமை மிக்கவர் என்கிற தகவல்களை ரோஸ்டகிராம் வழங்குகிறது.
கூடவே சுவாரஸ்யமான ‘பஞ்ச்’ வசனங்களையும் வெளியிடுகிறது. செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியோடு இது இயங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
ரோஸ்டகிராமில், பிரபலங்களின் ஆளுமைகளும் அலசி ஆராயப்படுகிறது. கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ , பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், கிரிக்கெட் வீரர் தோனி வரை எண்ணற்ற பிரபலங்களின் இன்ஸ்டகிராம் ஆளுமையை அலசிப் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.