தென்னிந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகரான சூர்யா, தற்போது இயக்குநர் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் Post Production பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன.
இந்தத் திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
கங்குவா திரைப்படத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் கங்குவா படத்தின் Trailer, Fire பாடல் என்பன கடந்த மாதம் வெளியாகி பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது. அத்துடன் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தன.
இந்த நிலையில் கங்குவா திரைப்படம் ஒக்டோபர் மாதத்தில் வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம் Post Production பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதமா? அல்லது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் வெளியீடா? என்று சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா
"சூர்யா திரைத்துறையில் அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். இந்தியத் திரைத்துறைக்கு கங்குவா திரைப்படம் ஒரு பெருமையாக அமையும். படத்தின் வெளியீட்டுத் திகதி குறித்து விரைவில் அப்டேட் தருகிறோம்" என கூறியுள்ளார்.