தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்னா (Mokshagna) ‘சிம்பா’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியாகியிருந்த ‘ஹனுமான்’ என்ற தெலுங்குத் திரைப்படம் இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு 400 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.
இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த திரைப்படம் ‘சிம்பா’. இந்தத் திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மோக்ஷக்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பிரசாந்த் வர்மா, “பாலகிருஷ்ணாவின் ஆசியுடன், அவரது மகனை இந்தப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.