சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அங்கிருந்த படியே தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
சுனிதா மற்றும் புட்ச் இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சோதனைப் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் 5 ஆம் திகதி சென்றனர். ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப இருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு, இயந்திரக் கோளாறு காரணமாக அவர்கள் அங்கேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் பூமிக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுனிதா, குடிமக்கள் கடமையை செய்வது மிகவும் முக்கியமானது. இது மிகவும் இலகுவான விடயம். விண்வெளியில் இருந்து வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நாசா விண்வெளி வீரர் டேவிட் வுல்ஃப் மிர் விண்வெளி நிலையத்தில் இருந்து வாக்களித்த முதல் அமெரிக்கர் ஆவார். தேர்தல் நாளுக்கு முன், ஒரு மறைகுறியாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு JSC-இன் Mission Control மூலம் விண்வெளி வீரர்களுடன் இணைக்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் E Mail மூலம் தனித்தனியாக Login அனுப்பப்படும் அதைப் பயன்படுத்தி, விண்வெளி வீரர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளை அணுகி, வாக்களிக்கலாம், பின்னர் அதை Down Link செய்து பூமியில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
அதன்பின்னர், அவர்களின் வாக்குகளும் இணைத்துக் கொள்ளப்படும்.