தற்போது எம்மில் அதிகமானவர்கள் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினையால் அவதிப்படுவதைப் பார்த்திருப்போம். இதனால் உணவுக் குறைப்பு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 17 கிலோகிராம் எடை கொண்ட பூனை ஒன்று உடல் எடையைக் குறைப்பதற்காக ரஷ்யாவில் உள்ள விலங்குகள் காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தற்போது இந்தப் பூனையால் நடக்க கூட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ரஷ்யாவில் உள்ள விலங்குகள் காப்பகத்தின் அடித்தளத்தில் இந்தப் பூனை தங்க வைக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகின் அதிக எடையுடன் காணப்படும் 5 பூனைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
ஒரு வாரத்திற்கு முன்னர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பூனை தற்போது தேறி வருவதாக அதனைப் பராமரித்து வரும் பராமரிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.