நம்மை சுற்றி இருக்கும் பல செடிகளும் கொடிகளும் மருத்துவ குணமும் மகத்துவமும் மிக்கவை. அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய, நம் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மருதாணியானது பல மருத்துவ குணங்களைக் கொண்டது. மருதாணியின் இலை, பூ, பட்டை என அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும். அதேபோல் மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி அதனை தலையணை போல் செய்து நித்திரைக்குச் சென்றால் நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும். மேலும் உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாட்கள் வெயிலில் வைத்து, பின்னர் வடிகட்டி பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கமும் உண்டாகும்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கும் எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம்.