நடிப்பின் நாயகன் என்று இரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் சூர்யா. மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து இரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தைப் பெற்றதுடன் 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான இந்தியாவின் தேசிய விருதையும் பெற்ற பெருமைக்குரியவராவார்.
தற்போது இவர் நடிப்பில் 'கங்குவா' திரைப்படமும் திரைக்குவரத் தயாராக உள்ள நிலையில் 'சூர்யா 44' திரைப்படத்திலும் மிக வேகமாகப் பணியாற்றி வருகிறார். இத் திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதுடன் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இருவரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர். மேலும் 'சூர்யா 44' படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அந்தமான் மற்றும் ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த படப்பிடிப்பு மகிழ்ச்சியாக தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் திறமையான நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன் மறக்க முடியாத அனுபவங்கள் பல கிடைத்ததாகவும் மேலும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சகோதரனைத் தான் உருவாக்கியுள்ளதோடு, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தும் மகிழ்ச்சியான பதிவொன்றை நடிகர் சூர்யா தனது X தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
'சூர்யா 44' திரைப்படத்திற்காக இரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.