ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி வெற்றியீட்டி அரையிறுதி வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டது.
மறுபுறத்தில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி இம்முறை மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் ஒரு வெற்றியைக்கூட பெறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியது.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.
இம்முறை மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 100 ஓட்டங்களைக் கடந்தது இதுவே முதல் முறையாகும்.
இதனையடுத்து 116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி நடப்பு மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பையும் அதிகரித்துக் கொண்டது.