'கங்குவா' திரைப்படம் ஆரம்பமான நாளிலிருந்தே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகமாகவுள்ளது.
நடிகர் சூர்யாவின் மாறுபட்ட வேடம் மற்றும் கதைக் களத்தினுடைய காட்சியமைப்பு போன்ற விடயங்கள் இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனாலேயே இத்திரைப்படத்தை தமிழ் தாண்டி பிற மொழிகளிலும் வெளியிடவேண்டும் என்ற முனைப்பில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆகியோர் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் 'Studio Green' நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத் திரைப்படமானது, எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இதுவரை இத்திரைப்படத்தில் இருந்து 2 டீசர்கள் மற்றும் ஒரு பாடலும் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
3Dஇல் தயாராகியுள்ள இத்திரைப்படத்தை ஹிந்தியில் மட்டும் சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிட, தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக 'Studio Green' நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
ஆகவே, 'கங்குவா' திரைப்படத்தின் வசூலானது மிகப்பெரிய அளவில் இருக்கும் என சூர்யா இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.