பொதுவாக கீரை வகைகள் என்றாலே உடலுக்கு அதிக நன்மைகளைத் தரக்கூடியவை. அந்தவகையில் வல்லாரைக்கீரையில் ஏராளமான சத்துக்களும் நன்மைகளும் நிறைந்துள்ளன. வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை என்ற பெயரைப் பெற்றதாக முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர்.
வல்லாரைக்கீரை ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகையைப் போக்குகிறது. இது முதன்மையாக மூளையின் செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், மூட்டு வலியைக் குறைப்பதற்கும், வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவதற்கும், மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றைக் குறைப்பதற்கும் துணை புரிகின்றது.
வல்லாரைக்கீரை பொடியில் பல் துலக்குவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்குவது மட்டுமல்லாமல், பற்கள் ஆரோக்கியமாகக் காணப்படும். ஞாபக சக்தி அதிகரிக்க வல்லாரைக்கீரையை தினமும் காலையில் சாப்பிடுவது நல்லது. வல்லாரையில் தோசை, சட்னி, சூப் என வகை வகையாக சமைத்துச் சாப்பிடலாம்.
வல்லாரையில் நிறைந்துள்ள சத்துக்கள் மூளையை சோர்வடையாமல் பார்த்துக்கொள்கிறது. கண் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள், ஒரு கைப்பிடி வல்லாரை இலைகளைச் சாப்பிட்டதன் பின்னர், பசும்பாலைக் குடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால், கண் எரிச்சல், கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.