நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியின் நன்மைகள் ஏராளம். கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு குறிப்புகளின் படி இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, பல் வலி, இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது.
இஞ்சியில் Vitamin A, C, B6, B12 மற்றும் கல்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. மேலும் குமட்டல், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலை நேர உபாதையை போக்க இஞ்சி உதவுகிறது. இஞ்சியில் உள்ள வேதிப்பொருள், நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி குமட்டல், வாந்தி மற்றும் மயக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
எடை குறைப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக உள்ளவர்களின் இடுப்பு பகுதியை குறைப்பது சவாலான ஒன்று. இதற்கு இஞ்சி உதவுகிறது. அத்துடன் வீக்கத்தை குறைப்பதில் இஞ்சி சிறந்த பங்கு வகிக்கிறது. உடல் எடையை குறைக்க இருப்பவர்கள் இஞ்சியை எடுத்துக்கொள்வது நல்லது.
அத்துடன் இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்தது. ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.