தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் இருந்தாலும் நடிப்புக்கெனத் தங்களை நிலைநாட்டி சினிமா இரசிகர்களுடைய மனதில் நடிப்புக்காகத் தனி இடம் பிடித்தவர்கள் ஒரு சிலரே.அதில் மிகவும் முக்கியமானவர்தான் நடிகர் தனுஷ்.
நடிகர் தனுஷ் தனது இயல்பான நடிப்புடன் எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கேற்றால் போல் தன்னை மாற்றிக் கொண்டு அனைத்து இரசிகர்களையும் கவர்வதுதான் இவருடைய தனிச் சிறப்பு. இதனாலேயேதான் சிறந்த நடிகருக்கான இந்தியத் தேசிய விருதை இரண்டு முறை வாங்கியிருக்கிறார்.
நடிப்பு மட்டுமன்றி தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் இயக்குநராகவும் உருவெடுத்து பவர் பாண்டி, ராயன் போன்ற திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் 'இட்லி கடை' ஆகிய திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.
இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதன்பின், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படத்திலும் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் மற்றும் லப்பர் பந்து திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சை முத்துவின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார்.
ஆகவே, நடிகர் தனுஷ் ஒரே சமயத்தில் இந்த 3 திரைப்படங்களிலும் நடிக்கவிருக்கும் தகவலானது அவரது இரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.