சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன், மஞ்சள் தூளையும் கலந்து கருவளையம் உள்ள பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் வரை காயவைத்துக் கொள்ளவேண்டும். இந்தக்கலவை நன்கு காய்ந்த பின்னர் முகத்தை சுத்தமாகக் கழுவிவர, கருவளையம் மறைந்து, முகம் பொலிவாகக் காணப்படும்.
இரவு நேரங்களில் ஒரு தேக்கரண்டி கசகசாவை பசும்பாலில் கலந்து ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் மறுநாள் காலையில் ஊறவைத்த கசகசாவை பேஸ்ட் போல அரைத்து, முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் முகத்தைக் கழுவி வர, முகம் பளபளப்பாகக் காணப்படும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிதளவு பாசிப்பயறு மாவையும் கலந்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் முகத்தைக் கழுவி வர, சருமம் பிரகாசமாகக் காணப்படும்.
2 தேக்கரண்டி அரிசி மாவுடன், 2 தேக்கரண்டி தயிரையும் கலந்து, முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர், குளிர்மையான நீரால் கழுவ வேண்டும். இது சருமத்தில் காணப்படும் சுருக்கங்களை நீக்கி, இளமையான சரும அழகைத் தருகின்றது.
ஆமணக்கு எண்ணெயைப் புருவங்களில் பூசுவதால், அடர்த்தியான புருவங்களைப் பெறலாம். அத்துடன் புருவங்கள் கருமையாகவும் காணப்படும்.
குளிர்ந்த நீரில் சிறிதளவு பசும்பாலைக் கலந்து அதனை பஞ்சால் தொட்டு, முகத்தில் மெதுவாகப் பூசி அரை மணிநேரம் வரை காயவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முகத்தை சுத்தமாகக் கழுவி வர, சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
எனவே மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி எமது சரும அழகை பாதுகாத்துக் கொள்வோம்.