ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட, உலகின் முதல் மர செயற்கைக்கோள், அண்மையில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இது நிலவு மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுகளில் மரத்தைப் பயன்படுத்துவதற்கான ஆரம்ப சோதனை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
லிக்னோசாட் (LignoSat) எனப்படும் இந்த செயற்கைக்கோள் ஜப்பான் நாட்டின் கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிடோமோ ஃபாரெஸ்ட்ரி நிறுவனத்தால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
உள்ளங்கை அளவிலான இந்த லிக்னோசாட், மனிதர்கள் விண்வெளியில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயவுள்ளது.
விண்வெளியில் வாழ மரத்தை பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மர செயற்கைக்கோள் நாசாவின் சான்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மரங்களை நடுதல், மர வீடுகளை கட்டுதல் போன்றவை குறித்து ஆய்வு செய்ய இந்த செயற்கைக் கோள் பயன்படும். இது ஜப்பான் விஞ்ஞானிகளின் 50 ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
விண்வெளியில் நீர் அல்லது ஒக்ஸிஜன் இல்லாத நிலையில், மரம் அழுகவோ ,எரியவோ வாய்ப்பு இல்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மர செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவது விண்வெளியில் மாசுபாட்டின் தாக்கத்தையும் குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
செயலிழந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் குப்பைகளாகத் தங்காமல் மீண்டும் பூமிக்குத் திரும்ப வேண்டும்.
வழக்கமான உலோக செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியின் வளிமண்டலத்துக்குள் வரும்போது அலுமினிய ஒக்சைட் துகள்களை உருவாக்குகின்றன.
ஆனால், மரத்தாலான செயற்கைக்கோள்கள் எரிந்துவிடும் என்பதால் குறைந்த மாசுபாடுதான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.