நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
இப்படத்தில் த்ரிஷா, எஸ்.ஜே.சூர்யா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'Mythri Movie Makers' தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த நிலையில் இவரது இசையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு புதிய இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமாரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் கூட்டணியில் இறுதியாக வெளிவந்த 'Mark Antony' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
இதன் மூலம் நடிகர் அஜித்குமாரின் திரைப்படத்திற்கு 17 வருடங்களுக்குப் பின் இசையமைக்கும் வாய்ப்பு ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு கிடைத்துள்ளது. இவர் இறுதியாக 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த 'கிரீடம்' திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை வெளியிட திரைப்படக் குழு திட்டமிட்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.