தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல்களை எதிர்பார்த்து இவரது இரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத மிகப்பெரிய கூட்டணி ஒன்று உருவாகவிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த 'தளபதி' திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்று இன்றுவரை இரசிகர்களால் பாராட்டுக்குரிய திரைப்படமாகத் திகழ்கிறது.
அந்தத் திரைப்படத்தின் பின் இன்றைய நாள் வரை ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் கூட்டணி எந்த ஒரு திரைப்படத்திலும் இணையவில்லை.
ஆகவே, இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்தக் கூட்டணி 34 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வத் தகவல் எதிர்வரும் 12ஆம் திகதி அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் அன்று வெளிவரும் என கூறப்படுகிறது.
இந்தக் கூட்டணியில் உருவாகும் திரைப்படமானது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
தற்போது, இயக்குநர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் 'தக் லைஃப்' திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.