எள்ளில் கறுப்பு, வெள்ளை, செந்நிறம் எள் என மூன்று வகைகள் உண்டு. கறுப்பு எள்ளில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இவை இரண்டுமே உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகளைத் தருகின்றன.
ஆனால் நாம் அதிகளவில் பயன்படுத்துவது கறுப்பு எள்ளினைத் தான். அத்தகைய எள்ளில் உள்ள சத்துகள் குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.
எள்ளில் இருக்கும் எண்ணெய், சருமத்தின் பளபளப்புத் தன்மையை அதிகப்படுத்துகிறது. அத்துடன் எள்ளை அதிகம் சாப்பிடுவதால் உடலிலுள்ள எலும்புகள் பலமாகும்.
எள்ளு இதயத்தில் ஏற்படும் அனைத்துவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் கறுப்பு எள்ளினை அதிக அளவில் எடுத்துக்கொண்டால், உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும்.
தினமும் சிறிதளவு எள்ளு சாப்பிட்டு வந்தால் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையைப் பெறுவார்கள்.
தினமும் சிறிதளவு எள்ளு சாப்பிட்டு வந்தால் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும். அத்துடன் படபடப்புத் தன்மை மறையும்.
ஒரு கப் பாலில் உள்ள கல்சியம், ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பாலை அருந்த முடியாதவர்கள் எள்ளு மிட்டாயைச் சாப்பிட்டாலே தேவையான கல்சியம் உடலுக்குக் கிடைத்துவிடும்.
ஆகவே, தினமும் சிறிதளவு எள்ளை நாம் உட்கொண்டு உடலில் ஏற்படும் நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.