தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் வித்தியாசமான கதைக்களத்தை தெரிவு செய்து அதனைத் தத்ரூபமான திரைப்படமாக உருவாக்கி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுவதில் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு தனி இடம் உள்ளது.
'அட்டக்கத்தி' திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை ஆரம்பித்த இயக்குநர் பா.இரஞ்சித் இன்றுவரை பல வெற்றிப் படங்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்துள்ளார்.
இதில் முக்கியமாக 'Super Star' ரஜினிகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய 'கபாலி' திரைப்படம் இவருடைய திரைத் துறையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
இறுதியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'தங்கலான்' திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தன.
இதனைத் தொடர்ந்து இவர் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்த கேள்விக்கு அவரே ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். அடுத்ததாக ஆர்யா, தினேஷ் மற்றும் அசோக் செல்வனை வைத்து 'வேட்டுவம்' என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை இவர் உறுதி செய்ததையடுத்து, இப் படத்தினுடைய கதைக்களம் என்னவாக இருக்கும், இம் மூன்று நடிகர்களினுடைய நடிப்பு மற்றும் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்று இரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.