சீனாவின் நஞ்சிங் உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமான 21ஆவது உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் சமோத் யோதசிங்க, இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
ஆண்களுக்கான 60 மீற்றர் தகுதிகாண் சுற்றின் இரண்டாவது போட்டியில் பங்குபற்றிய சமோத் யோதசிங்க, போட்டியை 6.70 செக்கன்களில் ஓடிமுடித்து 3ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதி வாய்ப்பைத் தனதாக்கினார்.
இருப்பினும் எட்டு தகுதிகாண் சுற்றுகள் முடிவில் அரை இறுதிக்குத் தகுதிபெற்ற 24 வீரர்களில் சமோத் யோதசிங்க கடைசி இடத்தையே பெற்றிருந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற அரை இறுதிகளின் இரண்டாவது போட்டியில் பங்குபற்றிய சமோத் யோதசிங்க மீண்டும் 6.70 செக்கன்களில் 60 மீற்றர் தூரத்தை ஓடி முடித்து 8ஆவது இடத்தைப் பெற்றார்.
ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டம், பெண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டம் ஆகியவற்றுக்கான இறுதிப் போட்டிகளில், இலங்கை நேரடியாக பங்குபற்றவுள்ளது. இப்போட்டிகள் இன்று இரவு இடம்பெறவுள்ளன.