யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த 'கஜிசனா தர்ஷன்' என்ற எட்டு வயது சிறுமி இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்கப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
இது தொடர்பாக அச்சிறுமியின் தந்தை கருத்துத் தெரிவிக்கையில், "எனது மகள் 2025இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண சதுரங்கப் போட்டியில் எட்டு வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் பங்குபற்றவுள்ளார். எட்டு வயதிலேயே எனது மகளுக்கு இந்தப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்லாமல், இந்த வருடத்தில் மட்டும் எனது மகள் ஐந்து சர்வதேசப் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
கடந்த மாதம் அல்பேனியாவில் மேற்கு ஆசிய இளையவர்களுக்கான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பங்குபற்றுவதற்கு நிதி அனுசரணை கிடைக்காததால் எனது மகள் அந்தப் போட்டியில் பங்குபற்ற முடியவில்லை.
ஆனாலும் எனது மகள், கடந்த வருடம் தேசிய ரீதியாக நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றதுடன் இலங்கையின் எட்டு வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் உத்தியோகபூர்வ வீரராக தெரிவு செய்யப்பட்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டு சர்வதேச வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன், கடந்த டிசம்பர் மாதம் உலக அளவிலான 'Rapid chess' சதுரங்கத் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
ஆகவே, இந்த வருடம் எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் உலகக் கிண்ண சதுரங்கப் போட்டியில் பங்குபற்றவுள்ளார். இதனை எண்ணி நான் மிகவும் பெருமை அடைகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.