தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரவி மோகன். கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவின் தலைப்புச் செய்தியாக அவர் மாறியிருக்கிறார்.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து 16 வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக நடிகர் ரவி மோகன் விவாகரத்துக் கோரி நீதிமன்றம் வரை சென்றார். இதனிடையில், ஐசரி கணேஷின் மகளின் திருமண நிகழ்வில் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் கைகோர்த்து ஒன்றாக வந்தமை பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆர்த்தி தனது Instagram பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், ரவி மோகன் தன்னையும், தன் குழந்தைகளையும் கைவிட்டு விட்டதாகவும், தான் அவரின் பணத்தை எப்போதும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவருடைய காதலை மட்டுமே தான் எதிர்பார்த்தேன் என்றும் உணர்வுபூர்வமாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் இப்பொழுது அவருடைய Instagram பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ''எனக்குத் தோழியாக அறிமுகமான பாடகி கெனிஷா என் வாழ்க்கையின் அழகான துணை, என் வாழ்வில் ஒளியைக் கொண்டு வந்தவர். எனது வீட்டை விட்டு நான் எதுவுமில்லாமல் வெளியேறிய போது எனக்குத் துணையாக நின்றவர் கெனிஷா, வாழ்க்கையில் சந்தித்த சட்ட, உணர்வு, நிதி ரீதியாக எல்லாப் பிரச்சினைகளிலும் என்னுடன் இருந்தவர்.
என்னுடைய கதையைக் கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக மட்டும் இல்லாமல், தோழியாக இருந்து உதவினார் கெனிஷா. எனது முன்னாள் மனைவியை மட்டுமே விட்டு விலக முடிவு செய்தேன், எனது குழந்தைகளை அல்ல. எனது குழைந்தைகள் தான் எனது பெருமையும் மகிழ்ச்சியும். அவர்களுக்காக அனைத்தையும் செய்வேன். சில நாட்களாக எனக்கிருக்கும் வருத்தம், 16 ஆண்டுகால துயரமான வாழ்க்கையை விடப் பெரிதல்ல.
கடந்த 5 ஆண்டுகளாக எனது வருமானத்தைக் கூட எனது பெற்றோருக்கு அனுப்ப மறுக்கப்பட்டேன். இத்தனை நாட்களாக அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்தேன். எனது அமைதிக்கும் எல்லை உண்டு'' என்று தனது அறிக்கையில் ரவி மோகன் குறிப்பிட்டுள்ளார்.