தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ், தற்பொழுது சேகர் கம்முலாவின் இயக்கத்தில் "குபேரா" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து "இட்லி கடை", "தேரே இஷ்க் மெயின்" ஆகிய திரைப்படங்களிலும் தனுஷ் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், சர்வதேச Cannes திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள மற்றுமொரு திரைப்படம் குறித்த தகவலொன்றும் வெளியாகியுள்ளது. காலஞ்சென்ற இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாகத் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கு "Kalam The Missile Man Of India" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் A.P.J. அப்துல் கலாம் எழுதிய "அக்னிச் சிறகுகள்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயங்களை நடிகர் தனுஷ் தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.