உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், Vitamin A, Vitamin C, Antioxidants அதிகம் நிறைந்துள்ள பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆரோக்கியம் நிறைந்த பாகற்காயைப் பயன்படுத்தி சுவையான பாகற்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பாகற்காய் தொக்கு செய்யத் தேவையான பொருட்கள் :
பாகற்காய் – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – மூன்று
தக்காளி – மூன்று
எண்ணெய் – இரண்டு மேசைக் கரண்டி
கடுகு – அரைத் தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய்த்தூள் – 2 மேசைக் கரண்டி
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
சர்க்கரை – சிறிதளவு
பாகற்காய்களை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதன் காம்புப் பகுதிகளை நீக்கிவிட்டு, மெல்லியதாக வட்ட வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தில் இரண்டு மேசைக் கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு,சீரகம்,ஒரு கொத்து கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் மூன்று பெரிய வெங்காயங்களைச் சுத்தம் செய்து, நறுக்கி நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடிப் பதத்திற்கு வந்ததும் நறுக்கிய தக்காளித் துண்டுகளையும் சேர்த்து வதக்குங்கள்.
இதனுடன் தேவையான அளவு உப்பு,குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் வெட்டி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளையும் சேர்த்து வேக வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்காமல், மூடி வைத்து வேக விடுங்கள்.
5 நிமிடங்களின் பின்னர் புளியைக் கரைத்து சேர்த்துக்கொள்ளவும். தேவையேற்படின் தண்ணீரும் சேர்க்கலாம்.
இந்தக் குழம்பு கொதிக்கும் போது ஒரு சிறு துண்டு சர்க்கரையை சேர்த்துக் கிளறுங்கள். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவினால் சுவையான பாகற்காய்த் தொக்கு தயார்.