நடிகை சிம்ரன் நடித்து வெளியாகிய 'Tourist Family' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, முன்பு இவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்தொன்றிற்குத் தற்போது விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் சிம்ரன் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல் 'டப்பா ரோல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சனம் செய்திருந்தார். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகப் பலராலும் பகிரப்பட்டு வந்தது.
சிம்ரன் குறிப்பிட்டது நடிகை ஜோதிகாவைத்தான் என்றும் அவர் நடித்த 'Dabba Cartel' என்ற Web seriesஐ வைத்துத் தான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் என்றும் இரசிகர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது அந்தக் கருத்திற்கு நடிகை சிம்ரன் "அன்று நான் பேசியது உண்மையில் எனக்கு நடந்ததாகும். மற்றவர்களைப் பற்றிக் குறை கூறுபவள் நான் அல்ல. எனவே, என் மனதில் இருக்கும் எண்ணத்தைத் தெரிவிப்பதற்கு அந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டேன்.
'Dabba Cartel' என்ற Web seriesஐ நானும் பார்த்தேன். அருமையாக இருந்தது. பலரும் அவர்களது ஊகங்களைச் சொல்லலாம். அதற்கு நான் பொறுப்பல்ல.
நான் குறிப்பிட்டுப் பேசிய நபருக்கு நான் சொன்ன விடயம் சரியாகப் போய் சேர்ந்துவிட்டது. அந்த நபர் என்னிடம் மன்னிப்புக் கேட்டுக் குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் அவர் என்னைக் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்திருந்தார்." என்று கூறி அந்த சர்ச்சைக் கருத்திற்கு விளக்கமளித்துள்ளார்.
இதில் ஜோதிகாவை விமர்சிக்கவில்லை என்று எங்கேயும் நடிகை சிம்ரன் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.