நடிகர் சிலம்பரசன், மணிரத்னத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து ''Thug Life'' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் மாதம் 5ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தை அவருடைய இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், சிம்புவின் 50ஆவது திரைப்படத்தின் புதிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.
அதில், நடிகர் சிம்பு தனது 50ஆவது திரைப்படத்தை, தானே தயாரித்து நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.
வரலாற்றுக் கதைக்களத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்திரத்தில் திருநங்கையாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் தனக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் பெரிய கனவு என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சிம்புவின் "STR 50" திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளமையினால், சிம்புவின் இரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.