மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில்' தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்ற கமல்ஹாசனின் பேச்சு தற்போது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தவிடயம் கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் (KFCC) மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் நரசிம்மலு , கமல்ஹாசன் தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், மன்னிப்புக் கேட்காவிட்டால், கமல்ஹாசன் நடித்த "தக் லைஃப்" திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்படாது என்றும், அதற்கு தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இதுகுறித்து கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் ஹாசன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தக் லைஃப் பட விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனையளிக்கிறது. பட விழாவில் வந்து கலந்துகொண்ட சிவராஜ்குமாரின் மீதான அன்பின் வெளிப்பாடாகவே அப்படி பேசினேன்.
அந்த பேச்சால் அவர் தர்மசங்கடங்களுக்கு உள்ளானதற்கு வருந்துகிறேன். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் நான் அப்படி பேசினேன். கன்னட மொழியின் வளமான பாரம்பரியத்தில் எந்த சர்ச்சையோ விவாதமோ இல்லை. "தவறு செய்தால் மட்டுமே மன்னிப்புக் கேட்க வேண்டும், தவறாகப் புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்புக் கேட்பது" என தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் கமல் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட நிலையில், "விளக்கம் சரிதான், ஆனால், கடிதத்தில் மன்னிப்பு என்கிற வார்த்தை மட்டும் விடுபட்டுள்ளது" என கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.