உலகின் மிக உயரமான ரயில் பாலமான ஜம்மு காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள செனாப் பாலம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
சுமார் 1,400 கோடி ரூபாய் இந்திய மதிப்பில் நிர்மாணிக்கப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரயில் மற்றும் வளைவுப் பாலமாகும்.இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீற்றர் உயரம் கொண்டது.
இந்தப் பாலம், 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாகவும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தைத் தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 8 அளவு வரை நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,315 மீற்றர் நீளமுள்ள இந்தப் பாலம், மணிக்கு 260 கி.மீ வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் வகையிலும், அதிக தீவிரம் கொண்ட பூகம்பங்களைத் தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செனாப் நதியின் நீர் ஓட்டத்தைத் தடுக்காமல் பாலத்தைக் கட்டியது மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. மேலும் வீதி இணைப்பு இல்லாததால், கனரக இயந்திரங்கள் மற்றும் பொருட்களை அந்த இடத்திற்குக் கொண்டு செல்வது மற்றுமொரு பெரிய சவாலாக இருந்தததாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து போக்குவரத்து இலகுவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.