இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவராக அண்மையில் சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை தலைவராக நியமிக்காதது பி.சி.சி.ஐ எடுத்த சரியான முடிவு என்று அவுஸ்திரேலிய முன்னாள் தலைவரான ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில் "உண்மையில் இது சரியான முடிவு என்று நான் நினைக்கின்றேன்.
ஜஸ்பிரித் பும்ராவை ஏன் தலைவராக தேர்ந்தெடுக்காமல் சுப்மன் கில்லை நியமனம் செய்துள்ளார்கள் என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், அதற்கான காரணம் மிகவும் எளிதானது. அதாவது கடந்த சில வருடங்களாகவே பும்ரா காயங்களுக்கு
உள்ளாகிவருகிறார்.
அணித்தலைவர் அடிக்கடி காயத்தை சந்தித்து வருவதும் போவதுமாக இருப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். எனவே இது சரியான முடிவு என்று நான் கருதுகின்றேன்.
2025 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை சுப்மன் கில் நன்றாக வழி நடத்தினார். எனவே தலைமைத்துவ பண்பு அவரிடம் நன்றாக இருக்கிறது.
அணித்தலைவராக இருக்கும் போது துடுப்பாட்டத்தில் ஓட்டங்கள் குவிப்பது முக்கியம்.
அதை ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் சரியாக செய்தார். எனவே அது மிகவும் சரியானது என்று நான் நினைக்கிறேன்.
முன்னோக்கிச் செல்லும் போது உங்களுக்கு அவர் நிறைய ஓட்டங்கள் அடிக்கக்கூடிய நல்ல தலைவராக செயற்படுவார்" என்று அவர் கூறியுள்ளார்.