உலக கிண்ணம் 2015.காலிறுதிக்கு முன்னர் கலக்கலும்..கலக்கமும்..பதினோராவது உலக கிண்ணத்தின் உச்ச பட்ச பரபரப்புக்கான நாட்களுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் உலகளாவிய ரீதியில் இப்போது தயாராகிவிட்டனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் கிரிக்கெட் திருவிழா என அழைக்கப்படும் உலக கிண்ணத்தின் உச்சபட்ச பரபரப்புகளுக்கு மத்தியில் காலிறுதியில் இப்போது எட்டு அணிகள் முட்டிமோதக் காத்திருக்கின்றன.
எட்டு அணிகளிலிருந்து அரையிறுதியை எட்டும் அந்த நான்கு அணிகள் எது என்றும் அவற்றிலிருந்து அரையிறுதிக்கு தேர்வாகி கிண்ணத்தை வெல்லப்போகும் சாம்பியன் அணி எதுவென்ற கேள்விகளுக்கு மத்தியில் இதுவரையான 42 ஆட்டங்களில் நிகழ்த்தப்பட்ட ஒரு சில சாதனைகளைப் தொகுத்து பட்டியலிடுகின்றோம்.
குழுநிலை ஆட்டங்களை பொறுத்தவரையில் குழு 'A' யில் நியூசிலாந்து அணியும் 'B' பிரிவில் இடம்பிடித்த நடப்பு உலக சாம்பியனான இந்தியாவும்தான் குழுநிலை ஆட்டங்களில் தோல்வியே காணாத அணிகளாகும்.
இந்த இரண்டு அணிகளும் அவர்களது குழுநிலை ஆட்டங்களின் 6 போட்டிகளிலும் வெற்றியையே பெற்றுள்ளன.அதிலும் இந்திய அணி பங்கெடுத்த 6 போட்டிகளிலும் எதிரணிகளின் 60 விக்கெட்களையும் கைப்பற்றிய அணி என்கின்ற சாதனையோடு இப்போது காலிறுதியை எட்டியிருக்கிறது.
இப்படி இந்த இரு அணிகளும் தோல்விகளையே சந்திக்காத நிலையில் இந்த உலக கிண்ணத்தில் வெற்றிகளையே ருசிக்காத அணிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
'B' பிரிவில் இடம்பெற்ற UAE மற்றும் 'A' பிரிவில் இடம்பெற்ற ஸ்கொட்லாந்து ஆகிய இரு அணிகளும், தங்களது குழுநிலைப் போட்டிகளில் ஒரு போட்டியிலும்கூட வெற்றியைப் பெறாமல் தங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றன.
அதிலும் குறிப்பாக ஏற்கனவே 2 உலக கிண்ணத் தொடர்களில் ஆடியிருந்தும் எந்தவொரு உலக கிண்ண வெற்றியையும் பெற்றிராத நிலையில் இம்முறையும் பங்கெடுத்த ஸ்கொட்லாந்து அணி 6 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது.
உலக கிண்ணப் போட்டிகளில் அதிக சதங்களைப் பெற்ற வீரர் எனும் சாதனையாளராக சச்சின் திகழ்கிறார்.இவர் 1992 முதல் 2011 வரையில் மொத்தம் 6 உலக கிண்ணத் தொடர்களில் பங்கெடுத்து 6 சதங்களைப் பெற்றுள்ளார்.ஆனால் இலங்கையின் குமார் சங்ககார இந்த உலக கிண்ணத் தொடரில் மட்டும் 4 சதங்களை விளாசியுள்ளார்.
இதன்மூலம் அதிக உலக கிண்ண சதங்களைப் பெற்றவர்கள் வரிசையில் சச்சினுக்கு அடுத்த நிலையில் சங்கா (5 சதங்கள்) திகழ்கிறார்.
வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து 4 சதங்கள் பெற்று புதிய உலக சாதனையை படைத்தார் குமார் சங்ககார.
ஏற்கனவே ஒட்டு மொத்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே அடுத்தடுத்து 3 சதங்கள் பெற்ற வீரர்களாக பாகிஸ்தானின் சகீர் அப்பாஸ்,சயிட் அன்வர் ,தென்னாபிரிக்காவின் கேர்சல் கிப்ஸ் ,டி வில்லியர்ஸ்,குயிண்டன் டி கொக் ,மற்றும் நியுசிலாந்தின் ரோஸ் டெயிலர் ஆகியோர் சாதித்து இருந்தாலும் இவ்வாறு 4 தொடர்ச்சியான சதங்களைப் பெற்ற வீரர்கள் யாரும் இல்லை எனும் நிலையில் இந்த அபரிவிதமான சாதனையை அதுவும் உலக கிண்ணத் தொடரில் அடுத்தடுத்து 4 சதங்கள் பெற்று சங்கா சாதித்திருக்கிறார்.
குழுநிலைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் சங்கா காணப்படுகின்றார். 6 போட்டிகளில் விளையாடி 496 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
இதுவரைக்குமான 41 ஆட்டங்களின் அடிப்படையில் மொத்தம் 35 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இலங்கையின் வீரர்கள் 8 சதங்கள் பெற்றுள்ளனர்.இந்தியாவின் வீரர்கள் 4 பெற்றுள்ள நிலையில் இம்முறை உலக கிண்ண அறிமுகம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி மட்டுமே சதங்களைக் குவிக்கத் தவறிய அணியாகும்.
தவான் ,டில்ஷான் ,மக்மதுல்லா ,ப்ரெண்ட டெயிலர் ஆகியோர் தலா இவ்விரு சதங்களைக் குவித்துள்ளனர்.
இத்தோடு உலக கிண்ணத்தில் பெறப்பட்ட அதிகபட்ச அணியொன்றின் ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனையை இந்தியா 2007 இல் பேர்முடாவுக்கு எதிராக 413 ஓட்டங்களைப் பெற்று சாதித்திருந்த நிலையில் அதனை ஆஸ்திரேலிய அணி (417 ஓட்டங்கள்) இம்முறை அந்த சாதனையை புதுப்பித்துள்ளது.
400 க்கும் அதிகமான ஓட்டங்கள் 3 தடவைகள் பெறப்பட்டது.தென்னாபிரிக்க அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கெதிராக 2 தடவைகள் 400 க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஆஸ்திரேலியா ஒரு தடவை பெற்றுக் கொண்டது.
அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் இந்த உலக கிண்ணத்த் தொடரில் அணியொன்றின் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக UAE அணியின் 102 ஓட்டங்கள் பதிவானது.இந்திய அணிக்கெதிரான போட்டியில் இந்த மோசமான பெறுபேற்றை UAE பெற்றது.
மிக விறுவிறுப்பான போட்டி முடிவாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியின் 2 பந்துகள் மீதமான வெற்றியும்,அயர்லாந்து மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி பெற்றுக்கொண்ட 5 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியும் அமைந்தது.
அத்தோடு இந்த 40 ஆண்டுகால உலக கிண்ண வரலாற்றில் இதுவரை இரட்டை சதம் குவித்த வரலாறு உலக கிண்ணத்தில் இல்லையெனும் குறையை சிம்பாவே அணிக்கெதிரான போட்டியில் கிரிஸ் கெயில் 215 ஓட்டங்கள் பெற்று புதிய சாதனை படைத்தார்.
அத்தோடு வேகமான உலக கிண்ண சதம் எனும் சாதனையை அயர்லாந்தின் வீரர் கெவின் ஒ பிரையன் தன் வசம் வைத்ருக்கின்றார்.50 பந்துகளில் இவர் இங்கிலாந்துக்கு எதிராக 2011 இல் சதம் குவித்தார்.
இந்த சாதனையை முறியடிக்கும் இரண்டு அருமையான சந்தர்ப்பம் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மக்ஸ்வெல்லுக்கு கிடைத்தாலும் அதனை அவர் தவறவிட்டிருந்தார்.
ஆயினும் 51 பந்துகளில் இலங்கை அணிக்கெதிராக இந்த உலக கிண்ணத் தொடரில்
மக்ஸ்வெல் சதத்தை எட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இது உலக கிண்ணத்தில் பெறப்பட்ட 2 வது வேகமான சதமாகும்.
ஒரே போட்டியில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 33 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்திய நியுசிலாந்தின் டிம் சவுத்தி ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக திகழ்கிறார்.
ஸ்கொட்லாந்துக்கு எதிராக 319 ஓட்டங்களை விரட்டிச் சென்று வங்கதேச அணி வெற்றி பெற்றதுதான் குழுநிலை போட்டிகளின் அணியொன்றின் பெரிய சேஸிங் வெற்றியாகும்
இதேவேளை தென் ஆப்பிரிக்காவின் அணித்தலைவர் டி வில்லியர்ஸ் இதுவரை மொத்தமாக 20 சிக்சர்கள் விளாசி முதலிடத்திலுள்ளார். 54 நான்கு ஓட்டங்களை விளாசி அதிக நான்கு ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் இலங்கையின் குமார் சங்ககாரா முதலிடத்திலுள்ளார்.
சிம்பாப்வே அணியின் சோன் வில்லியம்ஸ் மற்றும் பாகிஸ்தானின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் தலா 4 அரை சதங்கள் பெற்று அதிக அரை சதம் பெற்றுக்கொண்ட வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த உலக கிண்ணத் தொடரில் மெல்போர்னில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.இதுதான் உலகக் கிண்ணத்தில் இதுவரையான ஒரேயொரு ஹாட்ரிக் சாதனையாகும்.
உலக கிண்ணப் போட்டி வரலாற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவும் வரலாறு இம்முறையும் 6 வது தடவையாகவும் நிகழ்ந்திருக்கிறது.ஆனால் தென்னாபிரிக்காவை இந்தியா உலக கிண்ணப் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லையானாலும் இம்முறை அதனை இந்தியா தகர்த்து தென்னாபிரிக்காவை வென்று அந்த வரலாறை
புதுப்பித்திருக்கிறது.
வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆசிய நாட்டு வீரர்களின் ஆதிக்கம் இருக்காது எனும் கருத்தை பொய்பித்து இலங்கை,இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு ஆசிய நாடுகள் உலக கிண்ண கிரிக்கெட்டின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை இதுதான் முதல் முறையாகும். முன்னதாக 1996ல் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும் கிரிக்கெட்டை அறிமுகப் படுத்திய நாடு எனும் பெருமை பெற்றுள்ள இங்கிலாந்து இம்முறையும் காலிறுத்திக்கு கூட தேர்வாகாது வெளியேற்றப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
#காலிறுதிப் போட்டி அட்டவணைகள்.1.இலங்கை VS தென்னாபிரிக்கா -சிட்னி மைதானம் 9.00 AM
2.இந்தியா VS பங்களாதேஷ்-மெல்போர்ன் மைதானம் 9.00 AM
3.பாகிஸ்தான் VS ஆஸ்திரேலியா -அடிலெயிட் மைதானம் 9.00 AM
4.நியூசிலாந்து VS மேற்கிந்திய தீவுகள் -வெலிங்கடன் மைதானம் 6.30 AM
எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கும் காலிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை வரையும் இடம்பெறக் காத்திருக்கின்றன.
மொத்தம் 49 ஆட்டங்கள் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கும் இந்த உலக கிண்ணத்தில் இதுவரை 42 ஆட்டங்கள் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் 14 அணிகள் பங்கெடுத்த 11 வது உலக கிண்ணத்தில் இப்போதைய 8 அணிகளுக்குள் மகுடம் சூடும் அணி எதுவெனும் பலத்த கேள்வி இப்போது வலுப்பெற்றிருக்கிறது.
*தில்லையம்பலம் தரணீதரன். 2015.03.16