19,804 Views
தென்னிந்தியாவின் தமிழ்த் திரையுலகினர் மட்டுமல்லாது, ஊடகங்கள் தொடக்கம் ஊர் தோறும் வம்பளந்து வெட்டிக்கதைபேசும் வாய்கள் வரைக்கும் சுவாரஸ்யமான கதைப்பொருளாய் மாறிவிட்டது நம்ம சாமியின் மாமி த்ரிஷாவின் கலாட்டாக் கல்யாணம்.
திரைத்துறையில் நாயகியாகக் கால்பதித்து 10 வருடங்கள் தாண்டியும் மவுசு குறையாத நடிகை யாரென்றால் எல்லோருமே ஒரே குரலில் த்ரிஷா என்றே கூறுவார்கள். இன்னும் நாயகியாக நடிப்பதற்கான படங்களுக்கு பஞ்சமே இல்லாமல் கைவசம் நிறையப் படங்களையும் வைத்திருக்கிறார் அம்மணி. அத்தோடு பல படங்களில் நடிப்பதற்கும் திகதி ஒதுக்கிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் இந்த மாமி. இதுவே அவரது கல்யாணத்தை இப்போது எல்லோரிடமும் நகைப்புக்கு உள்ளாக்கும் கலாட்டாக் கல்யாணமாக்கியிருக்கிறது.
திரைப்படத் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தடல்புடலாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததும், இவர்கள் இருவரும் சேர்ந்து, சக நடிகர் நடிகைகளுக்கு பெருமெடுப்பில் விருந்து கொடுத்து அசத்தியதும் தெரிந்த விஷயம் தான். நிலைமை இப்படியிருக்க, இவர்களது திருமணம் திடீரென நின்று போனது தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரைத்துறையைப் பொறுத்தவரையில், தங்களது மவுசு குறையும் வரைக்கும் கதாநாயகியாக நடிக்கும் எந்த முன்னணி நடிகையும் திருமணத்தைப் பற்றிப் பேசவே விரும்புவதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் ஒரு சில வருடங்களின் பின்னர் திரையில் தலைகாட்டவே விரும்புவர். அப்படியிருக்க, நம்ம மாமிக்கு திருமணத்துக்குப் பின்னர் நடிக்க தடை சொல்லியிருக்கிறார்களாம் மாமியோட ஆத்துக்காரர் குடும்பம்.
அத்தோடு, கைவசம் உள்ள படங்களை விரைவாக முடிக்கும்படியும், வேறு படங்களை ஒப்புக்கொள்ள வேண்டாமென்றும், இறுதியாக தான் தயாரிக்கும் படத்திலேயே நடிக்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட உத்தரவுகளாம் அம்மணிக்கு. திருமணத்தின் பின்னும் திரையில் வரக் கனவு கண்ட மாமியின் கனவுகள் இந்த அதிரடி உத்தரவுகளால் கலைந்து போனதால் அதிர்ந்துபோன மாமி ஆத்துக்காரருடன் மிக மோசமாக முரண்பட்டதாக செய்திகள் கசிகின்றன.
இந்த நிலையில், முற்றிப்போன முரண்பாடுகள் மீண்டும் சமரச நிலைக்கு வரவில்லை. இருவரையும் சமரசநிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்த இரு தரப்பு நலன்விரும்பிகளினதும் முயற்சிகள் வீணாகிப்போய்விட்டதாம். இந்த பிரிவின் முடிவுக்கு முதலில் வந்ததே நம்ம சாமியின் மாமி என்றும், கையில் அணியப்பட்ட நிச்சயதார்த்த மோதிரமும் அம்மணியின் கையை விட்டு அகன்றுவிட்டதாகவும் அம்மணியின் நெருங்கிய வட்டாரம் கிசுகிசுக்கிறதாம்.
இது இப்படியிருக்க, வருண் மணியன் தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் த்ரிஷாவிற்கு கொடுக்கவிருந்த வாய்ப்பை தற்போது டாப்ஷிக்கு கொடுத்திருப்பதாகவும் நம்பத்தகுந்த தரப்பிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.
"வருண் மணியனுக்கு தானே திண்டாட்டம்... எங்களுக்கு கொண்டாட்டம் தான்...." என்கிறார்கள் மாமியின் ரசிகர்கள்.
*கணேசமூர்த்தி ராகவன்.