அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக மியான்மார் நாட்டின்
ரோஹிஞ்சா அகதிகள் விவகாரமும், மலேசிய மனிதப் புதைகுழிகளும் காணப்படுகின்றன.
பிரதான செய்தி ஊடகங்களும் இந்த படகு அகதி விவகாரம் பற்றிய கவனத்தை செலுத்தினாலும் சர்வதேச அமைப்புக்களின் நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கு தொடர்கிறது.
மியன்மாரின் இந்த
ரோஹிஞ்சா அகதிகளின் படகு விவகாரம் மீண்டும் பேசப்பட ஆரம்பிக்க, மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த ரோஹிங்கிய படுகொலைகள் இப்போது நடப்பது போல சமூக வலைத்தளங்களில் பரவலாகத் தகவல்கள் பரப்பப்பட ஆரம்பித்தன..
இதன் பின்னணி விவகாரங்கள் பற்றி ஓரளவுக்கு ஆராயும் நோக்கிலும் தற்போதைய மியான்மாரின் உண்மை நிலை பற்றி தெளிவுபடுத்தும் நோக்கிலும் இந்தக் கட்டுரை..
மலேசியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்ததுடன், ஊடகங்களின் தலையங்களிலும் இடம்பெற்றது.
இலங்கை போன்ற நீண்டகால யுத்தத்திற்கு முகங்கொடுத்த , சிறுபான்மையினருக்கு எதிராக நீண்டகாலமாக சத்தமின்றி அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நாடொன்றில் மனித புதைகுழிகள் என்பது சாதாரண செய்தி என்ற போதிலும் மலேசியாவில் முதன் முறையாக இத்தகைய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.
தற்போதைய தகவல்களின் படி சுமார் 139 மனித புதைகுழிகளும், 20 சித்திரவதை முகாம்களும் மலேசியாவின் தாய்லாந்து எல்லைப் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் இன்னல்களை எதிர்நோக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம் இனத்தவர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களை கடத்துவதற்கு தாய்லாந்து ஊடாக பயன்படுத்தப்பட்ட மார்க்கத்திலேயே இந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலைக் கடந்து தாய்லாந்தின் தெற்கு காட்டுப்பகுதியின் ஊடாக மலேசியா எனும் 'கனவுத்' தேசத்தை அடையும் பொருட்டு இவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அடக்குமுறை மற்றும் வறுமையின் கோரப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளுவதே இவர்கள் இத்தகைய ஆபத்தான பயணத்தை தேர்ந்தெடுப்பதற்கான காரணமாகும்.

இதேபோல் ரோஹிஞ்சா முஸ்லிம் இனத்தவர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்களை ஏற்றிக் கொண்டு தாய்லாந்து கரைப்பகுதியை அடையும் படகுகளை மலேசியா , இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை என்ற செய்திகளை அண்மைக்காலமாக அறியக் கிடைக்கின்றது.
புதைகுழி மற்றும் சட்டவிரோத படகுப் பயணம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியவுடன் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது அனைவரது பார்வையும் விழத்தொடங்கியுள்ளது.
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்களா மொழி பேசும், பங்களாதேஷின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரகிஹினே மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் நீண்டநாட்களாக அந்நாட்டில் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
1982 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தையடுத்து இவர்கள் தமது பிரஜாவுரிமையை இழந்தனர். அதன் பின்னர் அந்நாட்டு பிரஜைகளாக மியன்மார் அரசு இதுவரை பிரகடனப்படுத்தவில்லை மாறாக அவர்களை வந்தேறு குடிகளாகவே இதுவரை அடையாளப்படுத்தி வருகின்றது.
உலகில் அதிகமாக அடைக்குமுறைக்கு முகங்கொடுக்கும் இனங்களில் ஒன்றாக ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கருதப்படுகின்றனர்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் கட்டாய தொழிலாளிகளாக ஈடுபடுத்தப்படல் , உத்தியோகபூர்வ அனுமதியின்றி திருமணம் செய்ய முடியாமை, நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பில் உள்வாங்கப்படாமை, அனுமதியின்றி வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமை , பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு என இவர்கள் மீதான அடக்குமுறைகள் ஏராளம்.
இதுமட்டுமன்றி திட்டமிட்ட முறையில் இவர்கள் இனவழிப்பு செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் பல காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அண்மைக்கால சம்பவங்கள்
வரலாற்றில் பல தடவைகள் இவர்கள் மீது அரச அனுசரனை மற்றும் அனுமதியுடன் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
குறிப்பாக மிக இறுதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு , மே மாதம் 28 ஆம் திகதி 3 முஸ்லிம் ஆண்கள் , பௌத்த பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்ததாகக் கூறி அங்கு பாரிய வன்முறைகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் , வன்முறையைக் காரணம் காட்டி பலர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் சுமார் 75,000 முஸ்லிம்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஐ.நா. வின் புள்ளிவிபரங்களின் படி சுமார் 140,000 பேர் தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை கொல்லப்பட்ட , வெளியேற்றப்பட்டோரின் உண்மை எண்ணிக்கையை இதுவரை யாரும் சரியாக குறிப்பிடவில்லை.
தற்போதைய சமூகவலைதளங்கள் ஊடான பிரச்சாரம் மற்றும் மிகைப்படுத்தல்கள்
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை தொடர் கதையாக உள்ளது. இது பல தசாப்தங்களாக நீடிக்கின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்கள் ஊடாக பல எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சமூக ஆர்வலர்கள் பலர், பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு ஆதரவாகவும் , இதனை வேடிக்கை பார்த்துவரும் ஐ.நா. உட்பட சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகளுக்கு கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின் படி தற்போது அந்நாட்டில் எவ்வித பாரிய அசம்பாவித சம்பவங்களோ , வன்முறைகளோ இடம்பெறவில்லை. இதை பொது அமைப்புக்களும், நடுநிலை சர்வதேச ஊடகங்களும் கூட உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும் விஷமிகள் சிலர் முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை சமூகவலைதளங்களில் குறிப்பாக பேஸ்புக்கில் இப்போது நடப்பதைப் போல பகிர்ந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

மக்கள் அங்கிருந்து தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றபோதிலும் அதற்கான காரணம் அடக்குமுறையே என்றபோதிலும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் மக்கள் கொத்துக் கொத்தாக எரிக்கப்படும் படங்களில் காட்டப்படும் நிலை அங்கு தற்போது இல்லை என உறுதிப்படுத்தப்படுகின்றது.
எனினும் படகு அகதிகளின் விவகாரம் சர்வதேச ஊடகங்களில் பேசப்பட்டு வருவது, மற்றும் மியான்மார் அரசாங்கத்துக்கு எதிராக குற்றம் சாட்டும் விரல்கள் நீள்வது போன்றவை அங்கே பௌத்த தீவிரவாத இயக்கங்கள், அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் இராணுவ அரசாங்கம் என்பவற்றுக்கு சிக்கல்களைக் கொடுத்துள்ளன.
எனவே அமைதியாக தற்போது இருந்தாலும், ரோஹிஞ்சா மக்கள் மீதான அச்சுறுத்தல் இன்னும் ஓயவில்லை.
அத்துடன் இடையிலேயே பௌத்த அமைப்புக்களால் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலில் அகதிகளாகத் தத்தளிப்போர் மியான்மாரை சேர்ந்தவர்களில்லை என்ற வகையில் கூட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் முக்கியமானது.
எனினும் பேஸ்புக்கில் இப்போது பரவலாகக் காணப்படும் புகைப்படங்கள் போல ஒரு கொடூர நிலையோ, பயங்கர இனவழிப்பு சம்பவங்களோ இல்லை என்பது உறுதியானது.
ஆனாலும் பரப்புபவர்கள் உண்மையறியாது "மியான்மாரில் பயங்கரம், இனவழிப்பு, முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்" என்ற தலைப்புக்களில் பல்வேறு புகைப்படங்களை ஆதாரமின்றி பரப்பி வருகின்றனர்.
இவற்றைப் பார்க்கும் பலருக்கும் நிஜமாக அங்கு தற்போது வன்முறைகள் இடம்பெறுகின்றதா என ஐயம் ஏற்பட்டுள்ளது.
இப்படங்கள் மற்றும் தகவல்களை பார்வையிடும் பலரும் அனுதாபத்தின் அடிப்படையில் ஆராயாமல் தகவல்களை மீள் பகிர்வு செய்து வருகின்றனர். பேஸ்புக்கில் காளான்கள் போல முளைத்துள்ள ஆயிரக்கணக்கான பக்கங்கள் , வெவ்வேறு நோக்கங்களின் அடிப்படையில் இவற்றை வெளியிட்டு வருகின்றன.
அதுமட்டுமன்றி போலியாக உருவாக்கப்படும் தனிநபர் கணக்குகளின் ஊடாக இனங்களுக்கிடையில் விஷம் விதைக்கப்படும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவை சிலநேரங்களில் அக்கறையுடனும் அனுதாபத்துடனும் வெளியிடப்பட்டு வந்தாலும் கூட, அது எங்கே சந்தர்பம் என்று காத்திருக்கும் விஷமிகளுக்கும் பேரினவாதிகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிடும் அபாயமும் உள்ளது.
அண்மையில் புங்குடுதீவு மாணவி கொலைசெய்யப்பட்ட தன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், அதன் பின்னர் அதற்கு இனவாத சாயம் பூசப்பட்டமை போன்றன இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சமூக ஊடகங்கள் ஊடாக விஷமிகள் முன்னெடுக்கும் இத்தகைய செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பொருட்டு பிரதமர் அண்மையில் சமூக ஊடக செயற்பாட்டளர்களை சந்தித்திருந்தார்.
எனவே போலிக் கணக்குகள் , பக்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இத்தகைய தகவல்கள் தொடர்பில் அவற்றின் பயனாளிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன் , எது உண்மை ? எது பொய் என்பது தொடர்பிலும் பிரித்தறியும் தெளிவையும் கொண்டிப்பது அவசியமாகின்றது.
உலகில் எப்பகுதியில் நிகழ்ந்தாலும் , எந்தவொரு இனக்குழுமத்துக்கு ஏற்பட்டாலும் வன்முறையும் , அடக்கு முறையும் கண்டிக்கப்படவேண்டியதே, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதும் ஒவ்வொரு மனிதனது கடமையே , இதற்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும் ஆர்வமேலிட்டால் , இனவாதத்தைத் தூண்டு கருத்துக்களோ , உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதோ மிகவும் அபாயகரமானது.
'எல்லோரும் கோஷமிடுகின்றார்கள்' நாமும் இடுவோம் என இல்லாமல் உண்மைகளை விளங்கிக்கொண்டு செயற்படுதல், சரியான, உறுதியான ,நம்பகமான தகவல்களை மட்டும் பகிர்வதும் ஆரோக்கிய சமுதாயத்துக்கும், இனங்களுக்கிடையிலான உண்மையான நல்லிணக்கத்துக்கும் ஏற்றதொன்றாக அமையும்.