10,223 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரை வைத்து நிறைய சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர். இளம் இயக்குனர்கள் பலரை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர். தமிழ்த் திரையுலகில் கோபக்காரரும் நாட்டாமை செய்த இயக்குனரும் யாரென்றால், அவர் தான் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவ்வளவு பெருமைக்குரிய இயக்குனர் இனிமேல் படங்களை இயக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் முதல் சுப்ரீம்ஸ்டார் வரைக்கும் அத்தனை முன்னணி நாயகர்களையும் இயக்கிய திறமைமிக்க இயக்குனர் இவர் என்றால் மிகையில்லை. இவருக்கு கொஞ்சநாளாக என்ன கெட்ட காலம் நேர்ந்ததோ தெரியவில்லை. இவரது அண்மையில் இயக்கத்தில் வெளியான படங்கள் எவையும் அவ்வளவாக சோபிக்கவில்லை.
இவரின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி, எதிர்பார்த்த வெற்றியடையாத சூப்பர்ஸ்டார் ரஜினியின் "லிங்கா" திரைப்படமும் கூட இவரது இந்த முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தத் திரைப்படத்தை ஆரம்பித்த நாளிலிருந்து "லிங்கா"விற்கு பல பக்கங்களிலுமிருந்து உருவான எதிர்ப்புகளும், பல்வேறுபட்ட பிரச்சினைகளும் கூட இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாம்.
அத்தோடு, ரஜினியின் மகள் இயக்கிய "கோச்சடையான்" படம்கூட இவரது மேற்பார்வையிலேயே உருவாகி வெளியானது. அந்தப்படமும் கூட வெற்றியைக் கொண்டு வரவில்லை. படத்தின் தயாரிப்பாளர் தன் கையைச் சுட்டுக் கொண்டது தான் மிஞ்சியது. அதுவும்கூட இயக்குனரின் பெயரை கெடுத்துவிட்டது எனலாம். இவ்வாறான காரணங்கள் எல்லாம் சேர்ந்தே கே.எஸ்.ரவிக்குமார் இப்படியானதொரு கடும் முடிவை எடுக்கக் காரணமாக அமைந்தது என்கிறார்கள் இயக்குனருக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
இது இப்படியிருக்க, இயக்குனர் அவதாரத்தை முடித்துக்கொண்ட கே.எஸ்.ரவிக்குமார், தனுஷின் படமொன்றில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தப்போகும் இயக்குனர் இனிமேல் நடிகராக மட்டுமே திரையுலகில் வலம்வரப்போகின்றாராம். அத்தோடு, ஒரு படத்தைக்கூட இனி இயக்கப்போவதில்லை என்ற கடும் கொள்கையுடனேயே இந்த முடிவு எடுத்திருக்கிறாராம் இயக்குனர்.
*S. G. R