நாடுமுழுவதும் நேற்று நள்ளிரவிலும் அதிகாலை வேளையிலும் திடீர் மின்சாரத் தடைகள் ஏற்பட்டிருந்தன.
இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்திருந்தனர்.
பல மணித்தியாலங்கள் இத்தடை நீடித்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு செய்யுமாறு மின்சாரத்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இத்தடையால் ஏற்பட்ட வணிகரீதியான இழப்புகள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தடை ஏற்பட்டத்தை தொடர்ந்து சமூகவலைதளங்களில் இது தொடர்பில் தகவல் பரிமாற்றம் இடம்பெற்றதையடுத்து , மின் தடை நாடுபூராகவும் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.
புதிய புதிய 'ஹேஸ்டெக்கள்' உருவாக்கி மின் தடையினால் ஏற்பட்ட அசௌகரியங்கள் , சுவாரஸ்யமான விடயங்களையும் பலர் பகிர்ந்து வந்தனர். கொசுத்தொல்லை , குழந்தைகளின் அழுகை , நித்திரை தொலைக்கப்பட்டமை , ரத்த நிலவு என பல விடயங்கள் இதன்போது பகிரப்பட்டது.
பலர் தங்களது 'ஸ்மார்ட் போன்களின்' பெட்டரி குறைந்து வருகின்றமை தொடர்பிலும் கவலை தெரிவித்து வந்தனர்.
பின்னர் மின் தடையை சரிசெய்யும் பணியில் இறங்கியுள்ளதாக மின்சாரசபை தெரிவித்தது. எனினும் தடை தொடர்ந்து நீடித்ததால் விமர்சனங்கள் எழத் தொடங்கின.
சில மணித்தியாலங்களின் பின்னர் ஒவ்வோர் பிரதேசமாக , வேறு வேறு காலப்பகுதியில் நிலமை வழமைக்கு திரும்பியது.