அணு ஆயுதத் தாக்குதலையும், பெரும் சூறாவளிகளையும் தாங்கும் வல்லமை கொண்ட, நகர்த்தக்கூடிய பிரம்மாண்ட செயற்கை தீவை சீனா உருவாக்கி வருகிறது.
138 மீ. நீளமும், 85 மீ. அகலமும் கொண்ட இந்தத் தீவு, பாதி அளவு நீருக்குள் மூழ்கியிருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு என அனைத்திலும் அமெரிக்காவுக்கே சவால் விடும் சீனா, இப்போது கையில் எடுத்திருக்கும் திட்டம் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அதுதான் 'செயற்கை நடமாடும் தீவு' (Mobile Artificial Island). இது அணு ஆயுதமே வெடித்தாலும் தாங்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான மிதக்கும் கோட்டை.
கடலில் எழும் 6 முதல் 9 மீட்டர் உயரமுள்ள இராட்சத அலைகளையும், பயங்கரமான சூறாவளிகளையும் இது சர்வ சாதாரணமாகச் சமாளிக்கும்.
இந்தத் தீவில் ஒரே நேரத்தில் 238 பேர் வரை வசிக்கலாம்.
மிக முக்கியமாக, வெளியுலகத் தொடர்பே துண்டிக்கப்பட்டாலும், தொடர்ந்து 4 மாதங்கள் இந்தத் தீவில் உயிர்பிழைக்க முடியும்.
அந்த அளவிற்கு அவசரகால மின்சாரம் (Emergency Power), தகவல் தொடர்பு (Communication) மற்றும் நேவிகேஷன் வசதிகள் இதில் உள்ளன.
எதிர்வரும் 2028-ம் ஆண்டுக்குள் இது பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.