ஈழத்து இலக்கியத் துறையில் ஓர் மைல்கல் - 'செங்கை ஆழியான்'
ஈழத்து இளம்தலைமுறைக்கும் அதிக பரிச்சயம்மிக்க எழுத்தாளராக ஈழ இலக்கிய வரலாற்றில் தவிர்த்துக்கொள்ள முடியாத ஒரு தனி அங்கம் செங்கை ஆழியான்.
1941-ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் கந்தையா-அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது புதல்வராக குணராசா என்ற இயற்பெயரோடு பிறந்த இவர், ஈழத்து இலக்கிய வட்டத்துக்குள் 'செங்கை ஆழியான்' என்ற புனைபெயரில் எழுதுகோல் பதித்தார்.
ஆரம்பக்கல்வியை யாழ். இந்து ஆரம்பப்பாடசாலையிலும், தொடர்ந்து யாழ். இந்துக்கல்லூரியிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பயின்ற செங்கை ஆழியான், கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராகவும், யாழ். பல்கலைக்கழக பதிவாளராகவும் பதவிகளை வகித்த அரச உத்தியோகத்தர் என்பது அவரது படைப்புக்களை நேசித்த பலருக்கு தெரிந்திராத விடையம்.
மூத்த தலைமுறைக்கு "வாடைக்காற்று" என்றால், இளைய தலைமுறைக்கு "பிரளயம்" என அனைத்து தலைமுறை வாசகர்களுக்குள்ளும் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட தன்னிகரில்லா படைப்பாளி. புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வு நூல்கள், புதினங்கள், சிறுகதைகள், நாவல்கள் என பலதுறைகளையும் சேர்ந்த விடையங்களை தன் படைப்புக்களுக்குள் உள்ளடக்கிய பன்னூலாசிரியர் இவர்.
புதினம், நாவல்கள், சிறுகதைகள் என்பவற்றில் இவர் தொட்டுக்கொண்ட கதைக்களங்கள் ஏராளம். இருந்தும் 1990-ம் ஆண்டின் பின்னரான சிறுகதைகளும் நாவல்களுமே இளம் தலைமுறையிடையே இவரை அறிமுகம் செய்தன எனலாம்.
குறிப்பாக, வடக்கு மண்ணில் நிகழ்ந்த கொடூர யுத்தமும், அதனால் உண்டான இடப்பெயர்வும், மக்களின் வாழ்வும், அவலநிலையும், இவை சார்ந்த கதைக்களமுமே இவரது பின்னைய கால படைப்புக்களில் அதிகம் இடம்பிடித்திருந்தன. இவ்வாறு வெளிவந்த படைப்புக்களே ஈழத்து இலக்கிய படைப்பாளிகள் பலருக்கு மத்தியில் இளம் தலைமுறையிடையே இவருக்கென ஒரு முகவரியை தேடிக்கொடுத்திருந்தன.
ஈழத்து தமிழ் இலக்கியத்துறைக்கு தன் எழுத்தாலும் படைப்பாலும் மட்டுமல்லாது பதிப்புத்துறையிலும் தன்னாலான பங்களிப்பினை வழங்கி, 30ற்கும் மேற்பட்ட நாவல்களை படைத்திருந்த செங்கை ஆழியான் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நேற்று தமிழ் கூறும் நல்லுலகிலிருந்து மீளா விடைகொண்டார்.
குணராசா என்ற இயற்பெயர் மறந்து செங்கை ஆழியான் என்ற புனைபெயரே புகழ் பூக்க இதனை விடவும் காரணம் வேண்டுமோ...???