ஷங்கரின் பாய்ஸ்' படத்தில் அறிமுகமாகி சமீபத்தில் காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த சித்தார்த் ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு நல்ல பாடகர் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் முதன்முதலில் தமிழில் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தில் ஜெயம் ரவிக்காக 'அடடா அடடா' என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி மற்றும் எனக்குள் ஒருவன் ஆகிய படங்களிலும் பாடியுள்ளார்.
இந்நிலையில், தற்போது தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பா.விஜய் ஹீரோவாக நடித்து இயக்கும் 'ஸ்ட்ராபெர்ரி'' படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் இவர் பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும் என நம்புவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பா.விஜய் ஹீரோவாக நடிக்கும் 'ஸ்ட்ராபெர்ரி' படத்தில் ஆவ்னி மோதி, சமுத்திரக்கனி, ரோபோஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். தாஜ்நூர் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படத்தில் சித்தார்த்தை தவிர மேலும் மூன்று பாடல்களை பாடிய வி.ஐ.பிக்கள் டி.இமான், ஜி.வி.பிரகாஷ் மற்றும் உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-கோடம்பாக்கக் குருவி-