20,421 Views
தமிழ் திரையுலைகை மட்டுமன்றி தமிழக அரசியல் பிரமுகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது நடிகர் விவேக்கின் மகனின் மரணம்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நடிகர் விவேக்குக்கு இரங்கல் செய்தியொன்றையும் விவேக்கிற்கு அனுப்பியுள்ளார்.
"இந்த துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கி கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், பிரசன்னகுமாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். பிரசன்னகுமாரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும் , இயக்குனருமான பிரபு தேவா விவேக்கின் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சென்றுள்ளார். இதன்போது அவர் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கதறியழுததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபுதேவா தனது நெருங்கிய நண்பரான விவேக்கின் மகனின் நிலையை கண்டு அவரால் சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த த்தகவலை இயக்குனர் தங்கர் பச்சான் தனது பேஸ்புக் கணக்கின் ஊடாக வெளியிட்டுள்ளார்.
பிரபு தேவாவின் மகனும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சில காலங்களுக்கு முன் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தனது மகனின் இறுதி நிகழ்வுக்கு வருவோரை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் செயற்படவேண்டாமென விவேக் ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் , இன்று பிற்பகல் விவேக்கின் மகன் பிரசன்ன குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.