கடந்த 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வர்த்தகர் மொஹமட் சியாமின் வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல்வன் ரவிந்து குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மேல்நீதிமன்ற தலைவர் நீதிபதி லலித் ஜயசூரிய, குசலா சரோஜனி வீரவர்;த்தன மற்றும் அமேன்ர செனவிரட்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம் பெற்றது.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் மே மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொஹமட் அஹமதீன் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று வழக்கு தீர்ப்பின் பின்னர் கருத்து தெரிவித்திருந்த சியாமின் தந்தை வாஸ் குற்றவாளியல்லவென தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பில் சாட்சியளிக்கவும் தயார் என தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பில் தான் தெரிவித்த கருத்தை மீளப்பெறுவதாக மொஹமட் சியாமின் தந்தை இன்று தெரிவித்துள்ளார்.
தீர்ப்பின் பின்னர் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் , அதன் விளைவாகவே இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.