வீரம் பாடல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியதையடுத்து அவசர,அவசரமாக 'ஜில்லா' பாடல்களை வெளியிட்டுள்ளார்கள்.
நேற்று இளையதளபதி விஜய் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
'ஜில்லா' தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியும் உடன் இருந்தார். சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, தன்னை வைத்து படம் எடுத்த நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வந்த ஆர்.பி.சௌத்ரி, மூன்று தயாரிப்பாளர்களுக்கும், இரண்டு தயாரிப்பாளர்கள் குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராதவிதமாக, 'ஜில்லா' இசையை வெளியிட்டை நடத்தி எல்லோருக்கும் அதிர்ச்சியை அளித்தார்கள் ஜில்லா குழுவினர்.
விஜய் மேடையேறியதும் ஜில்லா இயக்குனர் நேசன், இசையமைப்பாளர் இமான் ஆகிய இருவரும் அரங்கத்துக்குள் வந்தனர்.
விஜய் 'ஜில்லா' இசையை வெளியிட, ஐந்து தயாரிப்பாளர்களும் பெற்றுக்கொண்டனர்.
21ம் திகதி 'ஜில்லா' இசை வெளியிடப்படும் என முன்னர் அறிவித்துவிட்டு, திடீரென இசை வெளியீட்டை நிகழ்த்தியது ஏன் என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய மண்டையைக் குடையும் கேள்வி.
பொங்கலுக்கு ஜில்லா வெளியாகாது என்று அரசியல் சம்பந்தப்படுத்தி வதந்தி பரவுவதையடுத்தே இந்த அதிரடி முடிவை விஜயும் தந்தையார் சந்திரசேகரனும் தயாரிப்பாளர் சௌத்ரியும் எடுத்ததாக கூறப்படுகிறது.