சச்சின் யார் என்று கேட்டதால் இணையத்தில் எழுந்த பரபரப்பை நாம் அறிவோம்.
தற்போது அதுபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கார் குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது உடமைகளை தவறாக வேறு இடத்துக்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் எயார்வேஸ் மீது சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் ஆவேசமாக கருத்தைப் பதிவு செய்ய , சச்சினுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஓல் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டுக்காக சச்சின் சென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரின் பயண நெருக்கடி பற்றி கோபமாக சச்சின் ட்வீட் செய்தார்: “எனது குடும்ப உறுப்பினர்களின் 'வெய்ட்டிங் லிஸ்ட்' டிக்கெட்டுக்கள் உறுதி செய்யப்படவில்லை. இருக்கைகள் இருந்தும் பயணம் உறுதி செய்யப்படவில்லை என்பது குறித்து கடும் கோபமும், விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளேன். மேலும் உடமைகள் தவறான இடத்துக்கு அனுப்பப்பட்டது, அக்கறையின்மையும் பொறுப்பின்மையும் இது காட்டுகிறது” என்று ஆவேசப்பட்டிருந்தார்.
இவரது டுவிட்டர் பதிவுக்கு சில நேரம் கழித்து பிரிடிஷ் எயார்வேஸ் பதில் அளிக்கையில், ‘மன்னிகவும் சச்சின், உங்களது உடமைகள் விவரங்களை உங்களது முழு பெயர், முகவரியுடன் அனுப்பினீர்கள் என்றால் நாங்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்’ என்று கூறியிருந்தது.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் சச்சின் ரசிகர்கள் பிரிட்டிஷ் எயார்வேஸை மன்னிக்க முடியாத நிலையில் கடும் வாசகங்களுடன் விமர்சனம் செய்தனர். அதாவது, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அளித்த அவஸ்தை, உடமை விவகாரம் மட்டுமல்லாது சச்சினின் முழுப்பெயரை கேட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பிரிடிஷ் எயார்வேஸ் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளனர்.