13,504 Views
பிரான்ஸின் பாரிஸில் தாக்குதலை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதி உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 5 பேருக்கு தாக்குதல் சம்பவத்தில் நேரடி தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரான்ஸ் முழுவதும் அந்த நாட்டு அதிரடிப் படையைச் சேர்ந்த 1500 பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேருக்கு தாக்குதலில் நேரடி தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. பாரிஸ் தாக்குதலை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். பிரிவு தலைமையேற்று நடத்தியுள்ளது.
அந்த நாட்டைச் சேர்ந்த அப்தெல்ஹமீட் என்பவர் பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார். சிறுவயதிலேயே பெல்ஜியத்தின் இருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்ற அவர் தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக உள்ளார்.
சிரியாவில் உள்ள முகாமில் அவரது தலைமையில்தான் பாரிஸ் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 27 வயதாகும் அவரை பிடிக்க பிரான்ஸ் உளவுத் துறை பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டு தப்பியதாக சலா அப்சலாம் என்ற தீவிரவாதியின் புகைப்படத்தை போலீஸார் நேற்று வெளியிட்டனர். பெல்ஜியத்தை பூர்விகமாகக் கொண்ட அவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர் ஆவார்.
கடந்த 13-ம் தேதி இரவு நடத்தப்பட்ட தாக்குதலின்போது சலா அப்சலாமை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அவரிடம் ஆயுதங்கள் இல்லாததால் அப்போது விட்டுவிட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் பெல்ஜியத்தில் பதுங்கியிருந்த அவரை அந்த நாட்டு பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களாக பிரான்ஸ் முழுவதும் சுமார் 168 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தினர். இதில் லியோன் நகரில் ரொக்கெட் ஏவுகணைகளை ஏவுவதற்கான சாதனங்கள், குவியல் குவியலாக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகத்தின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் பிரதமர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பிரான்ஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும், எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையிடமாகக் கருதப்படும் ரக்கா நகரம் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் நேற்று கடுமையான தாக்குதலை நடத்தின.
ஐ.எஸ். தீவிரவாதிகள் திணறும் வகையில் பல்வேறு தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்த ஆவேச தாக்குதல் தொடரும் என்றும் பிரான்ஸ் விமானப் படை தெரிவித்துள்ளது.