வடமாகாணசபையின் 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நேற்றையதினம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த மாதம் 15ம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் இந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து கடந்த நான்கு தினங்களாக பிரதம செயலாளர் அலுவலகம், ஆளுநர் செயலகம் மற்றும் 5 அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
நேற்றையதினம், மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண மீன்பிடி அமைச்சு ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதம் நடைபெற்றது.
இதனை அடுத்து, 2016ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தை சபை அங்கீகரிப்பதற்காக மாகாண கல்வியமைச்சரும், பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா சபையில் முன்மொழிந்தார்.
இதனை மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழிமொழிந்த நிலையில், எதிர்கட்சி தலைவர் சி.தவராசா எதிர்ப்புகள் இல்லை என்று தெரிவித்ததை அடுத்து, 2016ம் ஆண்டுக்கான வடமாகாணசபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.