உலக நாயகன் கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலையாவது பாடிவிடும் வழக்கம் உடையவர். சமீபத்தில் வெளியான உத்தம வில்லன்' திரைப்படத்தில் அவர் நான்கு பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மற்ற நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் அவர் பாடுவதில்லை. அவர் கடைசியாக கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான 'புதுப்பேட்டை' படத்தில் 'நெருப்பு வாயினில்' என்ற பாடலை அவர் நடிக்காத படத்தில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடலுக்கு பின்னர் கமல்ஹாசன் ஒன்பது வருடங்களுக்கு பின்னர் அவர் நடிக்காத படமான 'அவம்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். கவுரவ், வில்வா க்ரீஷ், காவ்யா ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள 'அவம்' படத்தை விஜய் வில்வா க்ரிஷ் இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தில் மதன்கார்க்கி எழுதிய 'காரிருள்' என்று தொடங்கும் பாடலை கமல்ஹாசன் பாடியுள்ளார்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியின் தந்தை குமார், கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து கமல் இந்த பாடலை பாடியதாக கூறப்படுகிறது. இந்த பாடல் நேற்று இணையதளங்களில் வெளியாகி பெரும் ஹிட்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-கோடம்பாக்கக் குருவி-