விண்வெளியில் வெற்றிகரமாக அமைக்கப்பட்டு சிறப்பாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது சர்வதேச விண்வெளி ஆய்வுமையம். இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து தற்போது 6 விஞ்ஞானிகள் விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கான பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட விண்ணோடம் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வினால் வேர்ஜினியா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏவுதளத்தில் வைத்து,விண்வெளியிலுள்ள சர்வதேச விஞ்ஞானிகளுக்கு தேவையான 2200கிலோ நிறைகொண்ட பொருட்கள் ஏற்றப்பட்டு இந்த ஆளில்லா விண்ணோடம் ஏவப்படும்போது ஏவுதளத்திலேயே வெடித்து சிதறியது.இதன் காரணமாக ஏவுதளமும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இதற்கான காரணம் என்னவென விரைவில் கண்டு பிடிப்போம் எனவும் செயற்கைக்கோள் விஞ்ஞானத்துறையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட உபதலைவர் (f) பிராங்க் கல்பேர்ட்சன்(Frank Culbertson) சொல்லியிருக்கிறார்.
அத்தோடு, "எங்களுடைய நீண்டகால சரித்திரத்தில் இதேபோன்ற நிறைய சம்பவங்களை எதிர்கொண்டு மீண்டு வந்திருக்கிறோம்.அதேபோல எமது குழுவினரை தயார்படுத்தி மீண்டும் வழமையான நிலைக்கு திரும்புவோம்" எனவும் (f) பிராங்க் கல்பேர்ட்சன்(Frank Culbertson) கூறியுள்ளார்.
தொகுப்பு - கணேஷமூர்த்தி ராகவன்.