சீ.சீ.டி.வி காணொளிகளுக்கு அமைய றக்பி வீரர் வசிம் தாஜூடினின் வாகனம் மற்றும் பின்னால் வந்த வாகனத்தின் இலக்கத்தையோ அதிலிருந்தவர்கள் தொடர்பிலோ அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி பிரிவு நீதிமன்றில் இதனை குறிப்பிட்டுள்ளது.
வசிம் தாஜூடீனின் கொலை தொடர்பான சீ.சீ.டிவிபதிவு தொடர்பான அறிக்கை, நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விசாரணைகளுக்கான வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனிப் பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி சாலிகா விளையாட்டுத்திடலுக்கு அருகில் இருந்த காரில் இருந்து, எரிந்த நிலையில் வசிம் தாஜூடீனின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த மரணம் வாகன விபத்து காரணமாக ஏற்பட்ட ஒன்று என முதற்கட்ட பிரேத பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், குறித்த மரணம் திடீர் அனர்த்தம் காரணமாக ஏற்பட்டதல்லவென தெரிவித்ததுடன், அது கொலையே என கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரி அஜித் தென்னகோன் உள்ளிட்ட மருத்துவ குழாம் பின்னர் அறிவித்திருந்தது.